search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக பொதுக்குழு"

    டெல்லியில் இன்று நடைபெற்று வரும் பாஜக பொதுக்குழுவில் வரும் பாராளுமன்ற தேர்தல் வரை அக்கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #BJPinternalpolls #AmitShah
    புதுடெல்லி:

    பா.ஜ.க. தலைவராக இருந்த நிதின் கட்கரி மீதான ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவராக ராஜ்நாத் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது.

    இதை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றதால் பாஜக தலைவர் பதவியில் அமித் ஷா நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதேபோல் அக்கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும்.

    இந்நிலையில், இன்று டெல்லியில் கூடிய பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தல் வரை அக்கட்சியின் தலைமை பதவியில் அமித் ஷா நீடிப்பார் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    முன்னதாக,  டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று தொடங்கிய செயற்குழு கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த அமித் ஷா, வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

    உயர்சாதியினரை திருப்திப்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்படுவதாக சிலர் குறிப்பிடும் நிலையில் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் தலித் மற்றும் பழங்குடியினரை கவரும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கருதப்படுகிறது.


    மேலும், தேசிய குடியுரிமை கணக்கெடுப்பு, தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் உரிய அங்கீகாரம் அளிப்பது உள்பட பாராளுமன்றத்தில் கிடப்பில் இருக்கும் பிரச்சனைகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி நிறைவு உரையாற்றும்போது சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது. #BJPinternalpolls #AmitShah  
    ×